headlines

img

பொய்களை, புனைவுகளை அம்பலப்படுத்தும் நூல் -மயிலைபாலு

அரசியல் சாசன சிற்பி டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்  என்று ஒருபக்கம் சொல்லிக்கொண்டு,  மறுபக்கம் அரசியல் சட்டத்தில் இருப்பதில் பெரும்பாலானவை அந்நிய கோட்பாடுகள் என்று கௌதம் பிங்ளே  போன்றவர்களை எழுதத்  தூண்டுவது;  அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொண்டதன் 70வது ஆண்டு பிறக்கவிருக்கும் தருணத்தில் “அரசியல் சட்டத்தில் குழப்பங்கள்” என்று திடீர் ஞானம் உதயமாகிறது.  (தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 13 - 7- 2019 ) அம்பேத்கரின் ஆளுமையை,  ஆற்றலை,  திறனை,  மேதைமையைக் குப்புறத் தள்ளிவிடலாம் என்ற முயற்சி இப்போது முளைத்திருப்பதல்ல. காலகாலமாய் நடப்பதுதான்.  இதுபோன்ற களைகளைக் களைவதற்கு அவ்வப்போது நூல்கள் வந்தே ஆக வேண்டிய அவசியம் இருக்கிறது. அந்தப் பணியை அர்ப்பணிப்போடு செய்து கொண்டிருக்கும் ஆளுமைகளில் ஒருவர் மருத்துவர் நா. ஜெயராமன். 

சொத்தைப் பற்களை அகற்றி உடல்நலம் பேணுவதற்கு உதவும் மருத்துவரான  இவர்,  அம்பேத்கருக்கு எதிராக -  ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு எதிராக - காவிக்கறைபடிந்த  ஆதிக்கவாதிகளின் சொத்தை வாதங்களைத் தகர்த்து அரசியல், சமூக, வரலாற்று அறிவுநலம் பேணுவதிலும் வல்லவராக இருப்பது தனிச்சிறப்பு. 

இந்த வகையில்,  முருகு.  ராசாங்கம் எழுதி,  கும்பகோணம் செங்குயில்  பதிப்பகம் வெளியிட்டுள்ள “புனா ஒப்பந்தம் :  புதைக்கப்பட்ட உண்மைகள்”,  “அம்பேத்கருக்கு மறுப்பு”  என ராஜாஜியும், “அம்பேத்கரின் ஆய்வறிக்கை:  மறுஆய்வு” என க. சந்தானமும் ஆங்கிலத்தில் எழுதிய நூல்களின்  தமிழாக்கம், (காந்திய இலக்கியச் சங்கம் -  மதுரை வெளியீடு), ம.வெங்கடேசன் எழுதி , கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ள “இந்துத்துவ அம்பேத்கர்” என மூன்று நூல்களுக்கு மறுப்புக் கட்டுரைகளை ஜெயராமன் எழுதியிருக்கிறார். 
நூல்களைப் படிப்பது,  பொய்களும் புனைவுகளும் ஆக இருப்பதைக்கண்டு பொருமுவது,  அரங்கக் கூட்டங்கள் நடத்தி ஆதங்கத்தைத் தணித்துக் கொள்வது என்ற நடைமுறைகளைத் தாண்டி , ஆணி அடித்தாற்போல் உண்மைகளை எழுத்தாக்கி மக்கள் முன் வைக்கும் நடைமுறை அவசியமானது. அந்தத் தேவையை நிறைவு செய்ய மூன்று கட்டுரைகளும் நூல் வடிவம் பெற்றுள்ளன. 

புனா ஒப்பந்தம் என்பது தலித் மக்களின் இரட்டை வாக்குரிமை குறித்தானது . அவர்களுக்கு அரசு அதிகார அமைப்புகளில் கிடைக்க வேண்டிய இடங்களைத் தட்டிப் பறிப்பதற்கு ‘மகாத்மா’ மேற்கொண்ட சாகும்வரை உண்ணாவிரதம் என்ற ‘சாகசத்தை’  முதல் நூலுக்கான மறுப்பு தெளிவாக்குகிறது. புதைக்கப்பட்ட உண்மைகள் என்று தலைப்பைத் தந்துவிட்டு மெய்யாகவே முருகு. ராசாங்கம் எவ்வளவு உண்மைகளைப் புதைத்திருக்கிறார் என்பதைப் பட்டியலிடுகிறார்.  

அதனூடாக ஆசிரியர் பதிவு செய்துள்ள ஓரிரு தொடர்கள் காந்தி - அம்பேத்கர் இடையேயான  முரண்களின் ஆழத்தை உணர வைக்கின்றன. “தீண்டாமை ஒழிப்பு என்பது காந்திக்கு சித்தாந்தம்.  ஆனால் டாக்டர் அம்பேத்கருக்கு அது வாழ்க்கை”  அனுபவத்தின் வெளிப்பாடு. “நீங்கள் ( காந்தி ) சேவை செய்ய சேரி ஒன்று வேண்டும் என்கிறீர்கள்.  டாக்டர் அம்பேத்கர் சேரியே கூடாது ; அது ஒழிக்கப்பட வேண்டும் என்கிறார் ”.

இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு மன்னிப்பு கோரிய உலக அனுபவங்கள் பலவற்றை எடுத்துக்காட்டாக்கியுள்ள மருத்துவர், தீண்டாமைக் கொடுமைகளுக்காக இந்துமதத்  தலைமைப் பீடங்கள் இதுவரை மன்னிப்புக் கோரியது உண்டா என்று சொல்வதில் இதுவரை மன்னிப்புக் கோரியது உண்டா ?  என்று எழுப்பியுள்ள வினா ஒரு சாட்டையடி. 
கிராமங்கள் ஒழிய வேண்டும் என்பது அம்பேத்கரின் கருத்து.  ஆனால் இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கிறது என்பது காந்தியின் கருத்து.  தீண்டாமையைப் பல்லாண்டு காலமாக வாழ வைத்துக்கொண்டிருப்பவை கிராமங்கள் என்பதிலிருந்து பிறந்தது அம்பேத்கர் கருத்து. கிராமங்கள் இந்து மதத்தைக் கெட்டிப்படுத்தும் நோக்கம் கொண்டிருப்பதை அடுக்கிய சான்றுகளால் இரண்டாவது கட்டுரையில் ஆசிரியர் அழுத்தமாக சொல்லியிருப்பது புதிய பார்வை.  
1946 இல் ராஜாஜியும், க.சந்தானமும் எழுதிய நூல்கள் 70 ஆண்டுகளுக்குப் பின் இப்போது தமிழாக்கம் செய்யப்பட்டிருப்பதைத் தெளிந்து கொள்வதன் தேவைக்கான மறுப்பு கட்டுரையாகவும் இது அமைந்துள்ளது.  

நான் இந்துவாகப்  பிறந்தது என்னால் தீர்மானிக்க முடியாதது.  ஆனால் இந்துவாக சாகமாட்டேன் என்று அறிவித்து புத்த மதம் தழுவிய அம்பேத்கரை  மீண்டும் இந்துத்துவச் சிமிழுக்குள் அடைக்க மத்தியில் ஆளும் அரசும்  அதற்கு ஒத்து ஊதுவோரும் முயற்சிப்பது வெளிப்படை. அந்த வழியில் “அம்பேத்கரின் கொள்கையையும் வாழ்நாள் பணியையும் திரிபு செய்யும் நோக்கத்தில் எழுதப்பட்டிருப்பது மூன்றாவது நூல்.  இதற்கு மறுப்புரைமட்டும் போதாது; கண்டனமும் தெரிவிக்க வேண்டும்”  என்ற அறச்சீற்றத்தோடுதான் கட்டுரையைத் தொடங்குகிறார். அந்தச் சீற்றம் கட்டுரை முழுமைக்கும் இழையோடுகிறது.

இடஒதுக்கீடு, இந்தி ஆட்சிமொழி, ஜம்மு - காஷ்மீர், மாட்டுக்கறி உணவு, கலப்புத் திருமணம், மனிதக்கழிவை மனிதர் அள்ளுவது, தீண்டாமை, கோயில் நுழைவு போன்று காவிமய ஆட்சிக்குப்பின் தீயாய்க் கொப்பளித்தெழும் பிரச்சனைகள் எண்ணற்றவை. இவற்றால் இன்னலுறும் தலித்மக்கள் எழுச்சியுடன் போராடுகிறார்கள். இதனை எதிர்கொள்ள முடியாதவர்களும், விரும்பாதவர்களும் வேறு வேறு உருக்கொண்டு, “அம்பேத்கரும் நம்மாளுதாம்பா” என்பதுபோல் எழுதியும் ,பேசியும், அறிவிப்புகளை வெளியிட்டும் வருகிறார்கள்.  இந்தப் போலிகளைத்தான் மூன்றாவது கட்டுரை ஆதாரங்களோடு அம்பலப்படுத்துகிறது. சான்றுக்கு ஒருசில: 

“வீர சாவர்க்கர் சாதி ஒழிப்பிற்காகப் பல இடங்களில் சமபந்தி விருந்து நடத்தியிருக்கிறார்.  மகர்களுடன் இணைந்து , அவர்கள் கைப்பட சமைத்துத் தந்த மாட்டிறைச்சியையும் உண்டு சாதி ஒழிப்பிற்காகப் போராடியிருக்கிறார்.” ( பக்கம் - 80 ) இதே வழியைப் பின்பற்றி,  சாவர்க்கரின் கனவையும் நோக்கத்தையும் நிறைவேற்ற இன்று ஆர்எஸ்எஸ்காரர்கள் எத்தனை சமபந்தி விருந்துகளையும் ,  சாவர்க்கர் பாணியில் மாட்டிறைச்சியையும் உண்டு -  உரிமை மறுக்கப்பட்ட மக்களின் இந்துமத இழிவு நீங்குவதற்காகப் போராடியிருக்கிறார்கள்? 
ஆர்எஸ்எஸ் கலப்புத் திருமணத்தில் நம்பிக்கை உள்ளது என்பதற்கு இரண்டு எடுத்துக்காட்டுகளை காண்பிக்கிறீர்கள் . இது கோல்வால்கர், சாவர்க்கர் காலத்தில் நடந்தது என்று பதிவு செய்கிறீர்கள் . ஆர்எஸ்எஸ் செத்துப்போன அமைப்பு அல்ல;  இந்த நிமிடம் வரை உயிருடன் இருக்கிறது .இந்துத்வ அம்பேத்கர் நூல் மார்ச்  2016 - ல்தான்  வெளியிடப்பட்டுள்ளது. இப்போது நடைபெற்ற கலப்பு மணம் என்று எடுத்துக்காட்டு எதையும் ஆசிரியரால் காண்பிக்க முடியவில்லையே . ஏன்? 
இந்த வினாக்களுக்கு சங்கிகளின் கள்ள மவுனம்தான் பதிலாக இருக்கும். 

புனா ஒப்பந்தத்திற்கு ஆலய நுழைவுக்கும் சமபந்தி போஜனத்திற்கும் காந்திஜி சங்கராச்சாரியாரிடம் மன்றாடியதும் அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததோடு மா. நீலகண்ட சித்தாந்தியார் மூலம் “தீண்டாதார் ஆலயப்பிரவேச நிக்ரஹம் (தடை)” நூல் எழுதச் செய்ததுமான தகவல்கள் அவசியம் இளையதலைமுறை அறிந்துகொள்ள வேண்டியதாகும்.


அம்பேத்கர்: இந்துவயப்படுத்த முடியாத தத்துவம்
வெளியீடு: தலித் முரசு
எஸ் - 5, மகாலட்சுமி அடுக்ககம், 
26 /13, குளக்கரை சாலை,
சென்னை - 600 034
தொ.பேசி: 044-28221314
பக்.160      ரூ.130

;